Wednesday 18 January 2017

புலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத் தாய்மொழி அறிவு அவசியமா?




புலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத் தாய்மொழி அறிவு அவசியமானததா? என்ன அபத்தமான கேள்வி என்று எம்மில் பலர் நினைப்போம். வேறு சிலர் இந்த வினாவுக்கு வேறு விதமாக, அதாவது தமது பிள்ளைகளுக்குத் தமிழ்மொழி அறிவு அவசியமில்லை என்று பதில் அளிப்பார்கள். ஆங்கிலம் தலைமை மொழியாக இருக்கும் இந்த நாட்டில் தமிழைப் படிப்பதனால் என்ன ஆகப்போகிறது? அது பணம் ஈட்ட உதவுமா? என்பது இல்லை என்போர் கேட்கும் எதிர்க் கேள்விகள். பணம் மட்டுமா வாழ்க்கை? மனித வாழ்வுக்கு பல உயர்ந்த அர்த்தங்கள் உள்ளன. படிப்பதும் பணம் உழைப்பதும் மட்டும் வாழ்க்கை என்று நினைத்து நாம் வாழ நினைத்தால் மனித வாழ்வு அர்த்தமற்றுப் போகும். படிப்பதும் பணம் உழைப்பதும் மட்டும் வாழ்க்கை என்று எல்லோருமே நினைத்திருந்தால் உலகம் இவ்வளவு முன்னேற்றங்களைச் சாதிக்க முடிந்திருக்குமா? பெருந்தொகையானோர் தம் வாழ்வை அர்ப்பணித்து உலகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்திருக்கிறார்கள். பலர் தமது சொகுசான வாழ்வைத் துறந்து உதவப் போனதால்தான் ஏழைகள், நோயுற்றவர்கள், யாருமற்ற ஏதிலிகள் இன்று ஓரளவில் வாழமுடிகிறது. எனவே, படிப்புக்கும் உழைப்புக்கும் அப்பால் வாழ்வுக்கு உயர்ந்த நோக்கங்கள், அர்த்தங்கள் உண்டு. அதில் எமக்கு நாமே செய்யும் மிக முக்கியமானதும் அடிப்படையானதும் அர்த்தபூர்வமானதுமான விடயம் என்னவெனின், யாரோ ஒருவராக, வேறு ஓர் இனத்தின் அடையாளத்துடன் வாழாது, நாம் நாமாக எமது அடையாளங்களுடன் வாழ்வதாகும். எமது அடையாளம் என்பதில் என்னென்ன அடங்கியுள்ளன? மிக அடிப்படையானது எமது மொழி. அடுத்தது எமது நாடு, எமது பண்பாடு மற்றும் பெறுமதிகள். உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நாம் தலை நிமிர்ந்து வாழ, இவையே எம்மை அடையாளங் காட்டும் விடயங்கள். இவற்றை நாம் காற்றில் பறக்க விட்டோமானால் எவரும் விரும்பாத மனிதர்களாக வாழ நேரும்.
தாய்மொழி என்பது ஒருவருக்கு மிகவும் முக்கியமானதாகும். அது சந்ததி சந்ததியாகப் பல்வேறு அரிய கருத்துக்களை, வாழ்க்கை முறைகளைப், பெறுமதிகளைப் பண்பாட்டு அம்சங்களை, வரலாறுகளை, மரபுகளை, இலக்கியங்களைச் சேமித்து வைத்திருக்கிறது. நாம் எமது மொழியை அறியாது விடுவதன் மூலம் எமது சமுதாயம், எமது பாரம்பரியம், நீண்ட காலம் வளர்ந்து வந்த இலக்கியங்களின் வரலாறு குறித்த பல அரிய விடயங்களை அறியாது விட்டுவிடுகிறோம். எமது தமிழ்மொழி போல நீண்ட வரலாறும், அளப்பரிய இலக்கியச் செழுமையும் கொண்ட மொழிகள் இந்த உலகில் மிகச் சிலவே உள்ளன. சில மொழிகள் எழுத்து வழக்கற்று பேச்சு மொழியாகவே அமைந்திருப்பதால் அடுத்த சந்ததியினர் அதனைப் பேசாது விடும்போது, அதனைப் பேசும் இறுதி முதியவர் இறக்கும் போது, அம்மொழி அழிந்து போகிறது. இரண்டு வாரத்திற்கு ஒரு மொழி என்ற அளவில் இவை அழிந்து கொண்டு போகின்றன. இந்த மொழிகளைக் காப்பாற்றும் பணியில் Enduring Voices project எனப்படும் மொழியியலாளர்களைக் கொண்ட குழு முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறது. ஏன் இவ்வாறு மொழிகளை அழிந்துவிடாமல் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்? எழுத்து இல்லாது பேச்சு மொழியாக மட்டும் உள்ளவை அழிந்து போனால் அந்த மொழி பேசுபவர்கள் வாய்மொழியாகச் சேமித்து வைத்த பெறுமதிமிக்க தகவல்களும் அவற்றுடன் அழிந்து போகும் என்பதாலேயே. அவுஸ்திரேலியாவிலுள்ள குயீஸ்லாந்து, வட மண்டலம், மேற்கு அவுஸ்திரேலியா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலேயே உள்ளூர் மொழிகள் அதிக அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ளன. இந்த பிரதேசங்களில் 153 வேறுபட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அழியும் நிலையில் உள்ளன. இதற்குக் காரணம் அம்மொழி பேசுபவர்களது இளைய சந்ததியோர் ஆங்கிலத்தைப் பேசித் தமது மொழியைப் பேசாது விடுவதே. Enduring Voices project இன் மற்றொரு இயக்குனரும் Living Tongues Institute for Endangered Languages அமைப்பின் இயக்குனருமான Gregory Anderson என்பவர், தற்போது பிள்ளைகளும் ஒரு மொழியின் விதியைத் தீர்மானிக்கிறார்கள் என்றும், தொலைக்காட்சியிலும் பாடசாலையிலும் பேசப்படும் மொழிக்கு அவர்கள் முதன்மை கொடுத்துத் தமது தாய்மொழியைப் புறக்கணிப்பதன் மூலம் அந்த மொழிக்கு அழிவு ஏற்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.
ஒவ்வொருவரும் தமது தாய் மொழியைப் பேசவேண்டும் அதனைத் தொடர்ந்து பேண வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒவ்வொரு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியும் யுனெஸ்கோ, சர்வதேச தாய்மொழி நாள் அதாவது International Mother Language Day என்றொரு நாளைக் கொண்டாடுகிறது. 1999 ஆம் வருடம் நடைபெற்ற யுனெஸ்கோவின் பொது மகாநாட்டில் இவ்வாறு வருடம் தோறும் தாய்மொழி நாள் கொண்டாடப்படவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் தேதி அதன் தலமையகத்தில் முதல் சர்வதேச தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டது. அந்த விழாவை ஆரம்பித்து வைத்த யுனெஸ்கோ என்ற அமைப்பின் இயக்குனர் நாயகம், தனது பேச்சின் போது பின்வருமாறு அழுத்தமாகக் கூறினார். மனித இனத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் ஒவ்வொருவருக்கும் தாய் மொழி என்பது மிக இன்றியமையாத பகுதியாகும். மனித படைப்பாற்றலின் குறைத்து மதிப்பிட முடியாத சிறப்பான வெளிப்பாடாகவும் இந்தத் தாய் மொழி அமைந்துள்ளது. இன்றைய உலகில் ஏறக்குறைய 7000 மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகள் சொல்லாடலுக்கான சாதனங்களை உருவாக்குவதில் மனித இனத்தின் வியத்தகு ஆற்றலுக்கான சான்றுகளாக விளங்குகின்றன. மனிதர் பிறந்த சமூகங்களின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இந்த மொழிகள் விளங்குகின்றன. பழைய காலம் முதல் பல மொழிகளைக் கற்கும் கல்வி முறையானது பண்பாட்டு வேறுபாடுகளைப் பாதுகாக்க மட்டுமல்ல, சர்வதேச புரிந்துணர்வையும் சகிப்புத்தன்மையையும், பரஸ்பர மரியாதையையும் ஏற்படுத்த வழியமைத்தது. யுனெஸ்கோவின் மொழிகளுக்கான நல்லெண்ண தூதுவர் இந்த முதல்நாள் விழாவில் கலந்து கொண்ட போது, மொழியானது அம்மொழி பேசுபவரின் பண்பாடு, அடையாளம் போன்றவற்றை வெளிப்படுத்துவதுடன், சிறந்த தொடர்பாடல் சாதனமாகவும் திகழ்கிறது என்பதையும், அவை மனித இனத்தின் மிகப் பெறுமதி வாய்ந்ததும் மென்மையானதுமான பொக்கிஷமாக இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
புலம்பெயர்ந்து வாழும் பிள்ளைகள் தமது தாய்மொழியை மிக இளம் வயதில் கற்பது இலகுவானது என்பதை மீண்டும் மீண்டும் ஆய்வுகள் நிரூபித்து வந்துள்ளன. அதனால்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என நாம் ஒரு பழமொழி வைத்திருக்கிறோம்.  The Brain That Changes Itself என்ற Norman Doidge என்பவரது புதிய நூல் ஒன்று மூளை எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகிறது. சிறு வயதில் ஒருவர் மொழிகளை இலகுவாகக் கற்றுக் கொள்வதைப் போல, வயது வந்த பின்னர் கற்க முடியாது. இதற்குக் காரணம் வயது முதிர, மூளை நெகிழ்ச்சியற்றுப் போவதென்பதல்ல. மொழி கற்றலுக்குரிய மூளைப்பகுதி ஒருவரின் அடிப்படை மொழியால் அதிகம் ஆக்கிரமிக்கப்படுவதே இதற்குக் காரணமாகும். இதனாலேயே இன்னொரு மொழியைக் கற்றல் என்பது கடினமாகிப் போகிறது. உதாரணமாக எமது மூளை தமிழ் மொழியாலே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எமக்கு இன்னொரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வது என்பது சிரமமாக இருக்கும். இதற்கு மாறாக பிள்ளைகள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கும் கூடிய மொழிகளை இலகுவாகக் கற்றுக் கொள்ள முடியும். அவர்களது மூளையில் உள்ள மொழிக்குரிய பகுதி, அந்த மொழிகள் அனைத்துக்கும் இடம் கொடுத்து, அந்தந்த மொழிகளுக்குரிய ஒலி அமைப்புக்களையும் சொற்களுக்கான கருத்துக்களையும் பேணி வைத்திருக்கும் நூலகமாக விளங்குகிறது. எனவே ஆரம்ப வயதில் மொழிகளைக் கற்றல் என்பது மிக எளிதானது. இதனால் இளம் பிள்ளைகள் தமது மிக இளமை அல்லது குழந்தைப் பருவத்தில் தமக்கு இயல்பாக உள்ள மொழி கற்கும் திறமையால் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மொழிகளில் தொடர்பாடும் திறமையைப் பெற்றுக் கொள்கின்றனர்.
பிள்ளைகளுக்கு அவர்களது தாய்மொழியில் போதிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நீண்ட காலமாக ஆசிரியர்கள் அறிந்திருந்தனர் என்கிறார் வாஷிங்டன் டி சியில் உள்ள Centre for Applied Linguistics இல் ஆலோசகராக இருக்கும் Nadine Dutcher என்பவர். பிள்ளைகள் தமது சொந்த மொழியில் அடிப்படைக் கல்வியைப் பெறுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகமான ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குறைந்தளவு பேர் பேசும் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மிகப் பெரும்பான்மையன மனிதர்கள் தமது மொழி பேசாத நாடுகளில் வாழ்வதால் அவர்களது பிள்ளைகள் தமது தாய்மொழியில் அடிப்படைக் கல்வியைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர். நியூசிலாந்தில் தமது தாய்மொழியில் அடிப்படைக் கல்வியைப் பெறும் மயோரி பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்கும் மயோரிப் பிள்ளைகளை விட நன்கு கற்பதாக அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் வெஜீனியாவில் உள்ள ஜோர்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வுப் பகுதி 15 மாநிலங்களில் உள்ள 23 ஆரம்பப் பாடசாலைகளின் பெறுபேறுகளை 1985 ஆம் ஆண்டிலிருந்து அவதானித்து வந்தது. இந்த பாடசாலைகளில் ஒரு பகுதி பாடத்திட்டம் பிற மொழி பேசும் பிள்ளைகளின் தாய்மொழியில் அளிக்கப்பட்டு வந்தது. பதினொரு வருட பாடசாலைக் கல்வியின் பின்னர், தாய்மொழியில் படிப்பதற்கும் பெறுபேறுகளுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது அவதானிக்கப்பட்டது. இருமொழிக் கல்வி பெற்றவர்களே உயர்தரக் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். தாய்மொழியில் கற்றல் என்பது அறிவாற்றலும் உணர்வுப் பெறுமதியும் கொண்டது. அந்த கல்வியைப் பெறும் போது சிறுபான்மையினர் தாம் மாரியாதைப்படுத்தப்பட்டதாக உணர்கின்றனர் என்கிறார் Dutcher. வெளிநாடுகளில் வாழும் வேற்றினப் பிள்ளைகள் தமது தாய்மொழிக்கு பதிலாக வேறு மொழியில் அதாவது அவரவர் வாழும் நாட்டுக்குரிய மொழியில் கல்வியைப் பெறும் போது இருவித தவறான செய்திகளைப் பெறுகிறார்கள். ஒன்று தாம் அறிவில் முன்னேற வேண்டுமாயின் அது தாய் மொழியைப் பயன்படுத்துவதால் வராது என்பது. மற்றது தாய்மொழியால் எதுவித பயனுமில்லை என்பது என்கிறார் ஐக்கிய ராச்சியத்தில் கல்வி மேம்பாட்டுத் துறை வல்லுனரான Clinton Robinson. சில செல்வந்த நாடுகள் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமது மொழிக் கொள்கையை மாற்றி வருகின்றன. ஒருவர் தான் வாழும் அந்நிய நாட்டில், அந்நாட்டு மக்களுடன் ஒன்றறக் கலந்து வாழ்தல் என்பதன் கருத்து அவர் தனது தாய் மொழியை மறந்து விடுதல் என்பதல்ல என்கிறார் பிரஞ்சு மொழியில் தேர்ச்சி பெறுதல் என்ற பிரான்சிய அரச துறையில் தலைவராக இருக்கும் Michel Rabaud என்பவர்.  பிரஞ்சிலிருந்து வேறுபட்ட ஒரு மொழியைப் பேசுதல் என்பது ஒரு பிள்ளைக்கு இப்போது இடையூறேயல்ல. வடக்கே உள்ள நாடுகள் மேலும் மேலும் புலம்பெயர்ந்தோரை எடுப்பதால் அதற்கேற்ப தமது கொள்கைகளை அமைக்க வேண்டியனவாக உள்ளன. 2000 ஆம் ஆண்டில் மேற்கு ஐரோப்பாவில் உள்ள 35 வயதுக்குட்பட்ட சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டவர் புலம்பெயர்ந்தோரே.
நெதர்லாந்தில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின்படி நாலுக்கும் பதினேழு வயதுக்கும் இடைப்பட்டோரில் 49 வீதமான ஆரம்ப பாடசாலை பிள்ளைகளும் 42 வீதமான உயர்தர பாடசாலை மாணவர்களும் வீட்டில் டச் தவிர்ந்த வேற்றுமொழி பேசுபவர்கள். மொழியால் ஒன்றுபடவேண்டும் என்ற பழைய மொழிக் கொள்கையைத் தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஒருவர் தனது தாய்மொழியில் பேசுவது என்பது அவரது உரிமை. தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே யுனெஸ்கோவால் சர்வதேச தாய்மொழி நாள் 1999 இல் பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று ஒருவரின் அடையாளம். பண்பாட்டை முன்னேற்றுவதில் மொழியின் முக்கியத்துவம் நன்குணரப்பட்டுள்ளது. இவ்வாறாக வளர்ந்து வரும் விழிப்புணர்ச்சிக்கிடையில் இதற்குத் தடைகளும் இருக்கவே செய்கின்றன. மொழிக் கொள்கை பற்றிய தீர்மானம் என்பது அரசியல் சார்ந்ததாகவே இன்னும் உள்ளது. அதே நேரம் எவ்வாறு கற்பிப்பது என்ற தொழில்நுட்பத் தடைகளும் உள்ளன என்கிறார் யுனெஸ்கோவின் தரமான கல்வியின் வளர்ச்சி என்ற பிரிவின் மூத்த உத்தியோகத்தரான Linda King. முக்கியமான அம்சம் என்னவெனில் உள்ளுர் மொழிகளை மதித்து அவற்றைப் பாடசாலை முறையில் சட்டபூர்வமாக இணைக்க வேண்டும். அத்துடன் மாணவர்களுக்குத் தேசிய மொழியையும் தாய் மொழியையும் கற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றும் மேலும் அவர் கூறுகிறார். இங்கே கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எமது தாய் மொழியாகிய தமிழைக் கற்பதன் முக்கியத்துவம் என்ன என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ளுதல் மிக அவசியம்.
நாம் எமது அடையாளத்தைப் பேண அடிப்படையில் செய்ய வேண்டியது எமது தாய்மொழியைப் படிப்பதாகும். ஏனெனில் அதுவே எம்மை ஏனைய அம்சங்களான நாடு, பண்பாடு ஆகியவற்றுடன் இணைக்கும் முக்கியமான கருவியாகத் திகழ்கிறது. தமிழைக் கதைத்தால் பின்னர் பாடசாலையில் ஆங்கிலம் கற்பது கடினமாகிப் போகும் என்று சிலர் தவறாக நினைக்கின்றனர். தாய்மொழி அறிவுடன் போகும் பிள்ளை ஆங்கிலத்தை மிக இலகுவாகக் கற்கிறது என்று மீண்டும் மீண்டும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. அத்துடன் சிறு வயதில் பல மொழிகளைக் கற்கும் ஆற்றலைப் பிள்ளைகள் இயல்பாகவே கொண்டிருக்கிறார்கள். மேலும் எமது தாய்மொழியாகிய தமிழைப் படிப்பதற்கு இலாப நட்டக் கணக்குப் பார்ப்பது சரியானதல்ல. நாமனைவரும் இவற்றை மனதில் கொள்வோம்.

2 comments:

  1. Nicely written piece with well grounded arguments for keeping one's identity through learning one's language. A well researched piece. Congratulations on a job well done.

    ReplyDelete
  2. நன்றிகள் - http://www.4tamilmedia.com/special/republish/5235-2017-02-21-10-35-08

    ReplyDelete